Description
இந்த நட்சத்திரக்காரர்கள் அபய வரதீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டைக்குச் சென்று, அங்கிருந்து 12 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை அடையலாம்.பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலாவரும் உலோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. இந்த மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவார்கள்.அதே நேரம் அங்கு சென்று சரணடைந்தவர்களை அவர் அபயம் தந்து காப்பாற்றுவார். இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர்.முற்காலத்தில், அசுரர்களினால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் அடைக்கலம் புகுந்தனர். பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் இக்கோவிலில் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது.இந்த சக்தியின் உருவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார். இந்த முனிவர்கள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இக்கோவில் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது