பங்குனி உத்திரம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முருகனுக்குரிய விரத நாள் என்பது தான். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம். அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. ஆனால் இந்த பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. இந்த நன்னாளில் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும், அபிஷேகம் செய்தும் அவர்களது வேண்டுதலின் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
வைகாசி பெளர்ணமி நாளை விசாகம் என்றும், தை மாத பெளர்ணமியை தைப்பூசம் என்றும், பங்குனி மாத பெளர்ணமி பங்குனி உத்திரம் என்றும், சித்ரா பெளர்ணமி என்றும், கார்த்திகை பெளர்ணமி திருவண்ணாமலை தீபம் என்றும், மார்கழி பெளர்ணமி திருவாதிரை என்றும் வைத்து ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமி நாளையும் விரத நாளாக கொண்டாடி வருகிறோம். பங்குனி, தை, வைகாசி உள்ளிட்ட பல மாதங்களில் வரும் பெளர்ணமி முருகனுக்குரிய விரத நாட்களாக கருதப்படுகிறது.