மழைக்காலத்தின் துவக்கமாக இருக்கும் ஆடி மாதத்தின் முதல் நாளே ஆடிப் பண்டிகை என்று கோலாகலமாக கொண்டாடப்படும். மாதம் முழுவதுமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேஷம் என்று களைகட்டும். குறிப்பாக ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடிப் பூரம், என்று முதல் நாள் தொடங்கி, ஆடி இறுதி நாள் வரை எல்லா நாளும் பரபரப்பாகவே இருக்கும்.
ஆடி மாதம் பெரும்பாலானவர்கள் தங்கள் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு செல்வார்கள். வெவ்வேறு ஊரில் வசிப்பவர்கள் கூட ஒன்று சேர்ந்து வழிபாடு செய்யும் பழக்கம் இருப்பதால் ஆடி மாத பிறப்பன்று, காலையில் விளக்கு ஏற்றிய பிறகு, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு குலதெய்வத்தை காணிக்கையாக ஒரு ரூபாயோ அல்லது தங்களால் இயன்ற தொகையை மஞ்சள் துணியில் முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். குல தெய்வ கோவிலுக்கு செல்லும் போது, அதை பிரார்த்தனை உண்டியலில் சேர்த்து விடுங்கள்.
அம்பாளுக்கு, அல்லது அம்மன் படங்களுக்கு மல்லி, முல்லை, ரோஜா பூக்களை, மலைகளை சாற்றி விளக்கேற்றி மனதார வேண்டிக் கொள்ளவும்.
இது போன்ற விசேஷ நாட்களில் வெல்லம் தேங்காய் சேர்க்கப்பட்ட பருப்பு பாயசம் செய்வது வழக்கம். இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது மற்றும் அம்பாளுக்கு உகந்த நெய்வேத்தியங்களில் ஒன்றாகும். கற்கண்டு, தேங்காய், பூ, பழம், வெற்றிலை பாக்கு, நாணயங்கள், இனிப்புகள், பழங்கள், வெல்லம் உள்ளிட்டவை வைத்து அம்பாளுக்கு பூஜை செய்யுங்கள். லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி போன்ற கவசங்களை கூறலாம் அல்லது கேட்கலாம்.
